Interview – ATBC Tamil Radio

புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது தமிழ் மக்களிடையே பல்வேறு விதமான கலை வெளிப்பாடுகளை காட்டி தனித்துவமாக இருக்கும் எமது இளைய சமுதாயத்தினர் மத்தியிலே நீங்களும் நன்கு அறியப்பட்ட ஒரு பாடகர் இசையமைப்பாளர் அந்தவகையிலே உங்கள் இசைத்துறையின் ஆரம்பம் எப்படி இருந்தது?
உண்மையிலே நான் இந்த தொழில்நுட்ப ரீதியிலான இசையமைப்பாளன் என்றல்ல, ஆரம்ப காலத்திலே பாடல்களை எழுதிக்கொடுக்கின்ற பழக்கத்தை உடைய ஒரு ஆள். ஆனால் அப்படி எழுதிக்கொடுக்கப்பட்ட பாடல்கள் எதுவுமே இறுவட்டில் வராத பட்சத்தில் கொஞ்சம் விரக்தியடைந்து அதைவிட வேறு சினிமாப்பாடல்கள் சிலவற்றை கேட்டபோது இதைவிட நாம் எழுதலாமே ஆனால் ஏன் எங்களுடைய பாடல்கள் வெளிவருவதில்லை என்ற ஒரு ஆதங்கமும், நானே ஏதாவது செய்யவேண்டும் ஒரு கட்டாயத்திற்கு என்னை உட்படுத்தியது. அந்த ஒரு நேரத்திலே எனக்கு பாடல் படிக்க தெரியாது அதாவது சங்கீதம் சரியாக அதாவது சுருதியோடு பாடல் படிக்க தெரியாது என்ற காரணத்தினால் தான் தான் “ரப்” பகுதிக்கு போனால் நல்லம் எண்டும், ஆரம்பகாலத்திலே “ரப்” பாடல்களை நாங்கள் கேட்டு அதாவது சினிமாவிலே வந்த ஓரிரு “ரப்” பாடல்களை கேட்டு ஆசைப்பட்டபடியால் அந்த craze இலே வந்து பிறகு அப்படியே ரப்பராகவும் பின்னர் பல பல வேறு வேறு வடிவங்களிலேயும் அறியப்பட்டிருக்கிறேன்.
“ரப்” இசை வடிவம் என்பது தொண்ணூறுகளுக்கு பிறகுதான் எமது தாயகத்திலே இப்போது பரவலாக இசைத்தட்டுக்களாகவும் வெளிவருகின்றன. உங்களுடைய முயற்சியை பொறுத்தவரையில் நீங்கள் இந்த “ரப்” இசை வட்டுக்களை தாயகத்திலிருந்து வெளியேறி புலம்பெயர் வாழ்வில் தான் அதனை ஆரம்பித்திருந்தீர்களா?
ஆம் ஆம், எப்படியென்று சொன்னால் அன்று வந்த சினிமாவில் ஓரிரு பாடல்கள், அந்த பேட்டை ராப் என்கின்ற காதலனிலே ஒரு பாடல், ஜெண்டில்மென் இல் கிட்டதட்ட அந்த ரைப்பான சிக்குபுக்கு ரயிலே என்ற பாடல். என்று ஒரு சில பாடல்கள் இருந்தன. நான் அங்கு (தாயகத்தில்) இருக்கும் போது ஒரு இசையமைப்பாளனாக, அல்லது ஒரு மற்ற அதாவது மெட்டுக்களோடு எப்படிச்சொல்வது மெலடி ரைப் சோங் என்று சொல்வார்களே, மெட்டுக்களோடு இருக்கிற அந்த பாடல்களின் இசையமைப்பாளராக வரவேணும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இங்கு வந்து இந்த பிரச்சினைகள் காரணமாக அது பற்றிய பெரிய அளவான அறிவு இல்லாதபடியினால் இங்கே வந்து இப்படியான துறைக்குள் வரவேண்டியாதாப் போச்சு.
நீங்கள் அந்தவகையில் உங்களுடைய முதல் முயற்சியை எப்போது வெளியிட்டீர்கள்? அதைப்பற்றி சொல்லுங்களேன்.
2005ஆம் ஆண்டு சிங்கிள்ஷ் என்று ஒரு குறுவட்டை வெளியிட்டிருந்தேன். அதில் 14 பாடல்கள் உள்ளடங்கியிருந்தது. அதுவும் இப்படித்தன் வழமையாக நான் பாடல் எழுதிக்கொடுத்துக்கொண்டிருக்கிற சந்தோஷ் அவரிடம்தான் அந்த பாடலுக்கு உதவி செய்தார். முதல் பாடல் கொஞ்சம் நில் என்ற ஒரு பாடல். அந்த பாடலில் அனேகமாக இரண்டாவது பந்தியில் எண்டு நினைக்கிறேன். ஈழத்தில் பிறந்து இடர்கள் பட்டு வந்தேன், பல துன்பங்களை பற்றி சொல்லி இறுதியாக சந்தோஷோடு இசையமைத்துக்கொண்டு இருக்கிறேன் பாடல்களை வெளியிட்டு கொண்டிருக்கிறேன் என்று அந்த பாடல்களில் எனது சுயவிளக்கம் ஒன்று சொல்லப்பட்டிருக்கும் கொஞ்சம் நில் என்ற சிங்கிள்ஸ் என்ற பாடலில். அதுதான் எனது முதல் பாடல்.
அதாவது எண்பதுகளின் இறுதிப்பகுதிகளிலே பூபாளம் என்கின்ற தமிழ் ரெகே லண்டனிலே வெளியிடப்பட்டு புலம்பெயர் இளைஞர்களுடைய மனநிலை அவர்களுடைய பாங்கைவைத்து பாடல்கள் வெளிவந்திருந்தன. உங்களுடைய பாடல்களை பொறுத்தவரையில் உங்களுடைய ஆரம்ப முயற்ச்சிக்கு எப்படியான ஆதரவை வழங்கியிருந்தார்கள்?
ஆரம்பத்தில் எனக்கு ஆதரவு இருக்கவில்லை. எதிர்த்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் பூபாளம் என்பது ஒரு வித்தியாசமான தமிழ் ரெகெ என்று வரும்போதே அது ஒரு நகைச்சுவையாகத்தான் பாடல்கள் அமைந்திருந்தது. ஆச்சி ஓடிவாருங்கோ அவனில சாப்பிட்டு நாக்கு செத்து போயிட்டுது அந்தமாதிரியானதுவும் சுதுமலைப்பெடியன் சுதியான மாப்பிள்ளை இன்னொரு பிரச்சினை தலையில முடியில்ல” இப்படி நகைச்சுவையாக இருந்தபடியால் இயல்பாக மக்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “எண்ட மிஸ்ஸிஸ் வேலைக்கு போறா காசு கனக்க ஏர்ன் பண்ணி வாறா” இப்படியெல்லம் அதில் வரும். நான் வந்த காலத்தில “ரப்” என்பது மேற்கில ஆகவும் மோசமாக இருந்த காலம். Gangster rap, rugs, Girls இந்தமாதிரியான தலைப்புகளுக்குள் அவர்களுடைய பாடல்கள் இருக்கும் அப்படியானதைத்தான் கூட இளைஞர்கள் விரும்பினார்கள்.
அப்ப நாங்களும் இதுக்குள்ள ரப் எண்டு வந்தவுடன் நாங்களும் இந்தமாதிரி கறுப்பு இன மக்கள் போல கையை அசைத்துக்கொண்டு தொடங்கப்போகிறோம் அல்லது தேவையில்லாத ஒரு பிரச்சினையை எங்கட சமுதாயத்திற்குள் ஏற்படுத்தப்போகிறோம் என்பது ஒருபக்கம் அதைவிட எங்களுக்கு சினிமாவைத்தவிர எங்களுக்கு வேறு ஒண்டுமே தெரியாது என்கிற படியால் அதாவது ஈழத்தமிழர்களுக்கு எல்லாம் நாங்கள் இந்தியாவில் இருந்து அதாவது தமிழ்நாட்டில் இருந்து கலை எண்டு வருகின்ற போது பாரிய அளவில் தமிழ்நாட்டை நம்பி இருக்கிறபடியினால் இது ஒரு வேறு விதமாக அவர்களுக்கு இருந்தது. சொல்லுவார்கள் “Fear to the unknown” அதாவது தெரியாத ஒண்டுக்காக பயந்துகொண்டுப்போம் எண்டு.
இது என்ன புதுசா ஒண்டு வந்திருக்கு, இவன் என்ன விசரன் மாதிரி செய்யிறான் எண்டு நேரடியாகவே கனபேர் இதை எனக்கு எதிர்த்தார்கள் ஏன் இப்பவும் சிலர் என்னுடைய சில விடுதலைக்கு சம்பந்தமான பாடல்களை பார்க்கிறபோது அவர்கள் அதை என்ன இது இப்படியெல்லாம் கிட்டத்தட்ட அவமானப்படுத்து கிறார்கள் என்கிற மாதிரியான போக்கு சிலருக்கு இன்னும் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் அது பயங்கரமாக இருந்தது. பிறகு அது மாறிவிட்டது. இப்ப சிறிய அளவிலான ஆக்கள் அப்படியான ஏண்ணத்தில் இருக்கிறார்கள்.
நீங்கள் இப்படியான இசை வடிவத்திற்கு எமது பிரச்சினையை கலந்து கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எப்படி உதித்தது? அதாவது வித்தியாசமாக கொடுக்கும் போது ஒரு கவனத்தை ஈர்க்கும் என்கின்ற காரணத்தினாலா?
நான் கவனத்தை ஈர்க்கும் எண்டு என்னுடைய பாடல்களை செய்யவில்லை. ஒரு பேப்பர் என்கின்ற பத்திரிகையிலே நான் ஆசிரியர் குழுவிலே இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருந்தேன் ஒரு பத்திரிகையாளனாக. கனபேருக்கு நான் என்ன பெயரில் எழுதினேன் எண்டு தெரியாது. நான் சொல்வதில்லை. கொஞ்சம் பிரச்சினைக்குரிய விசயங்களை எழுதிக்கொண்டிருப்பதால் அதாவது இங்கத்தைய குழு மோதல்கள் பற்றியெல்லம் எழுதியிருந்தேன். அதைவிட சமூக அக்கறை கொண்ட பல விசயங்களை எழுதிக்கொண்டிருப்பேன். நாங்கள் இங்கே வந்து தெடர்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். பிள்ளைகளை பார்க்கமாட்டோம் பிள்ளைகளுக்கு காசு மட்டும் கொடுத்து நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் எண்டு நினைப்போம் பிள்ளைகளுக்கான நேரங்கள் இருப்பதில்லை அதாவது quality of time, quantity of time. எண்டு சொல்ல்வார்கள். அதாவது தரமான நேரமா அல்லது பெரிய அளவிலான நேரமா? எண்டு அப்படி பல விசயங்களை நான் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தேன்.
அப்போ அப்படி எழுதிக்கொண்டிருந்த எனக்கு இங்காலுப்பக்கம் பாடல்களை எழுதிக்கொண்டு திடீரெண்டு ரப் எண்டு வரும் போது இந்த விசயத்தை நான் ரப் மூலமாக அதாவது பாடல்களுக்கூடாக சொல்ல முயன்றேன். அதற்கு பிறகு அந்த பகுதியில் இருந்து விலகி வருகின்ற நேரம் வரும் போது அங்கு செய்த அவ்வளவு வேலையையும் இன்று பாடல்களுக்கூடாக செய்துவருகிறேன். அவ்வளவுதான் மற்றம்படி கவன ஈர்ப்பு எண்டு இல்லை. ஏனென்றால் இராவணனிலே கோழை என்றோரு பாடல் வருகிறது. அந்த பாடல் வந்து பெண்களை பற்றி பிழையாக பேசி சந்தோசப்படுகிற அல்லது தாங்கள் வெற்றி கொண்டவர்களாக நினைத்துக்கொள்கிற ஆண்களை பற்றிய பாடல். அதாவது ஒருவர் என்னிடம் கேட்டார் பொம்பிளைப்பிள்ளைகளை ராகெத் பண்ணி அவர்களிடம் நல்ல பெயர் எடுக்கத்தான் இப்படி பாட்டு வச்சிருக்கிறாய் எண்டு. அதே அல்பத்திலே (இராவணன்) கடவுள் என்றொரு பாடல் இருக்கிறது. அந்தப்பாடலில் நான் சொல்கிறேன் அன்புதான் கடவுள் என்று.
நீ கேட்டதெல்லம் கிடைக்காது, உன்ர கடவுள் முழுவதும் குடுக்காது, பணத்தை தெய்வம் மதிக்காதே, உன் பகட்டும் அதற்கு பிடிக்காதே என்று நேரிலே அடிப்பன். கடவுளை கூட நம்பிறவர்கள் ஆண்களை விட பெண்கள். கோயில் குளம் விரதம் எல்லம் பிடிப்பவர்கள் பெண்கள்தான். ஆனால் அவர்களுக்கு இந்த பாடல்களை கேட்கும் போது கொஞ்சம் கோவமாக இருக்கலாம் சில நேரங்களில். அதிலே சில வசனங்கள் வரும். ஐஸ் வைக்கிறார் தீபம் காட்டி என்று. அதாவது எங்களுக்கு உண்மையிலே ஒரு விசயம் கிடைக்க வேணும் எண்டு ஒரு காரணத்திற்காக கிட்டத்தட்ட டீல் மேக்கிங் மாதிரித்தான். நான் விரதம் பிடிப்பேன் நீ இதைச்செய். நான் விரதம் பிடிப்பேன் நீ செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் விரதம் பிடிக்கிறேன் என்கிறது வேற, அவர ஆமி விட்டால் நான் விரதம் பிடிப்பேன். பிரச்சினையில இருந்து வெளியில வந்தா நான் விரதம் பிடிப்பேன். டீலிலதான் போகிறது எல்லாம். அவையப்பற்றி எழுதியிருப்பன். கவனைஈர்ப்பு எண்டு சொல்லி பிரச்சினையான கவனைஈர்ப்பு அது இப்படியான விசயத்தை சொல்லுவது. கவனைஈர்ப்பு என்றதற்கு அப்பால சமுதாய அக்கறை ஒன்று இருக்க வேண்டும் என்பது எனது நேக்கமாக இருக்கிறது.
இப்போது நீங்கள் இராவண்ணன் என்றொரு இசைவட்டை நீங்கள் வெளியிட இருக்கிறீர்கள் அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
வெளியிட்டுவிட்டேன். தைத்திருநாளில்த்தான் இதனை வெளியிடப்பட்டது. இளையத்திற்கூடாகத்தான் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. எங்களுடைய இறுவெட்டை வெளியிடு விநியோகம் செய்யும் அளவுக்கு நாங்கள் இன்னும் வளரவில்லை. அதாவது இந்திய சினிமாப்பாடல்கள் என்று சொன்னால் இயல்பாகவே எல்லோருக்கும் தெரியும் எப்படியோ ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு மேலே இருக்கும் என்று. ஆனால் எங்களுடைய பாடல்கள் என்கின்ற போது அப்படியிருக்குமா என்கின்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. அந்தளவுக்குத்தான் நாங்கள் இருக்கிறோம். ஐந்தாறுபேர் அல்லது 20 பேர் இருக்கலாம் தரமான ஆக்கள் எண்டு. அல்லது பிரச்சினை இல்லாத இவர்கள் நம்பி வாங்கலாம் என்று இருந்தாலும் அது எத்தனை பேருக்கு தெரியும் எண்டு தெரியாது. என்னை தெரிந்தவர்களுக்கு பிரச்சினையில்லை, சிலபேர் என்னுடைய facebook page இலே எழுதுகிறார்கள். முதல் தடவையாக நான் பாடல் கேட்காமலேயே காசு குடுத்து வாங்குகின்ற முதல் அல்பம் இதுதான் எண்டு. அதற்கு காரணம் அவர்கள் என்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கை. அதால்தான் நாங்கள் இணையதளத்தின் ஊடாக முதலில் விற்பனை செய்கிறோம்.
சீடி என்பது இங்கு அதாவது எங்களுடைய பிரதேசங்களான லண்டனை சுற்றி ஏதாவது செய்யலாம். வெளியில் செய்வது என்பது கஷ்டமான வேலை. அதேவேளை கடையில் குடுத்தால் அப்படியே இருக்கும். வேற்று அல்லது வெள்ளைக்காரர்களைப்போல இந்த புரோமோஷன் மாக்கட்டிங் என்று பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது. அந்தளவிற்கு நாங்கள் இன்னும் வளரவில்லை. இதைவிட அதில் (இராவணன்) 15 பாடல்கள் இருக்கிறது. அதில் இராவணன் வரலாற்று பாடல் என்று சொல்வதா அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. கொமர்சியல் பாடல் இல்லை. அதாவது ஜனரஞ்சக்அமான பாடல் இல்லை. அது கிட்டத்தட்ட ஆரிய தமிழ் சம்பந்தமான பாடலாகத்தான் இருக்கும். அதாவது இராவண்ணன் என்ற பெயரை நான் வைக்கும் போதே சிலர் கேட்டார்கள், ஏன் இராவணன் எண்டு பெயர் வைக்கின்றீர்கள் எண்டு. முதலில ராவணன் எண்டு வைக்கேக்க அதற்கிடையில் மணிரத்தினத்தின் படம் வந்திட்டுது ராவணன் எண்டு. அட என்ன இந்தஆள் இப்படிச்செய்திட்டுது எண்டு ஏனெண்டா இந்த ப்ரெஜெக்ட் தொடங்கி 2 வருடங்களுக்கு மேலே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர். அப்ப இராவணன் எண்டு வைக்கவும் எனக்கு விருப்பமில்லை.
சிலர் இராமாயணம் எண்டு இருக்கிறதால் தானே இராவணன் எண்டு பெயர் வைக்கிறாய் எண்டு. அதால என்ன செய்யலாம் எண்டு கதைத்துகொண்டிக்கும் போது ஒருஆள் சொன்னர் இராவண்ணன் எண்டு வைக்கலாம் ஏனெண்டா கறுப்பு ஆக்கள்தான் தமிழர்கள் திராவிடர்கள். சில இடங்களில் அப்படியான பெயரும் சில இடங்களில் பயன்பட்டிருக்கு எண்டு சொன்னார். அப்ப நான் அது ஒரு நல்ல விசயம் எண்டு “இராவண்ணன்” எண்டு பெயரை வைத்துதேன். அந்த பாடலும் ஆரியத்திட்டத்திற்கு அடிக்கணும் ஆப்பு, செந்தமிழ் வீரம் நீ மறப்பது தப்பு எண்டு போய்க்கொண்டிருக்கும். அதைவிட தைத்திருநாள் அதை வெளியிடவேண்டும் என்றும் ஏனெனில் தமிழர் திருநாள் ஆரம்பத்திற்கு ஏற்றது. ஏனெனில் இராவணனை நான் ஒரு கதாநாயகனாக பார்க்கிறேன். இவ்வளவு நாளாக இராமாயணத்திலே இராவணனை கூடாதவனாக நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறோம்.
இலக்கியத்திலேயும் இராவணனை கெட்டவனாகத்தான் சொல்லித்தந்திருக்கிறார்கள். அவன் பக்க நியாயத்தை சொல்லதில்லை. ஈழத்தமிழர்களாகிய நாங்களே இராவணனை பிழையாகத்தான் பார்க்கிறோம். ஆனால் பாரதிதாசன் அங்கிருந்தே வீணை வேந்தன், அன்று அந்த லங்கையை ஆண்ட மறத்தமிழன் எல்லா திசைகளிலும் புகழ் கொண்டேன் என்று அவரே படித்திருக்கிறார். ஆரம்பத்தில் எனக்கு இந்த இராவணன் பிரச்சினை வந்தது ஒரு தீபாவளியில்தான். ஒரு இந்திய சகோதரன் என்னிடம் கேட்டர், ஏன் நீங்கள் தீபாவளியை கொண்டாடுகிறீர்கள் எண்டு. நான் அதுக்கு நரகாசூரர் விளக்கம் எல்லாம் சொல்லும் போது எனக்கே கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருந்தது. அந்த கதையை சொல்லும் போது எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது எங்கட கதை இப்படி இருக்குது எண்டு. ஆனால் ஆவர் அதனை சட்டை செய்யவில்லை. அவர் இவன் ஏதொ கதைக்கிறான் என சிரித்துவிட்டு போய்விட்டார்.
எனக்கு அவனில ஒரு சந்தேகம், இவன் ஏன் இதை என்னிடம் கேட்டவன் எண்டுட்டு கூகிள் பண்ணி பார்க்கும் போது ஒரு இடத்தில் ஒரு படம் ஒன்று அதாவது தீபவளிக்கு அவர்கள் ஒரு பொம்மை ஒன்றை வைத்து எரிக்கிறார்கள். அந்த பொம்மைக்கு பத்து தலைகள் இருக்கிறது. அதாவது அவர்கள் தீபாவளியை இராவணனை கொளுத்தித்தான் கொண்டாடுகிறார்கள். நான் நினைக்கிறேன் ஹேராம் படத்தில் இப்படி ஒரு காட்சி வரும் எண்டு நினைக்கிறேன். எங்களுடைய ஆக்கள் இப்பவெல்லம் ஹிந்தி பாடல்களை கேட்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இங்கி ஆங்கிலப்பாடல்களை கேட்கிறவர்கள் அடுத்து ஹிந்திப்பாடல்களை கேட்டால் அது கொஞ்சம் தரமானதாக நினைக்கிறார்கள். கடைசியில அதுக்குள்ளாலையும் இராவணன் கெட்டவனாகி விடுவான் என்பதற்காகத்தான் இராவண்ணான் என பெயர் வைத்தது. பிறகு இராவணனுக்கு ஒரு பாட்டும் வைத்து அதை விட சமூக அக்கறை எண்டு சொல்லி காசு கடவுள் என்னை மறந்து கலை என கொஞ்சப்பாடல்கள் இந்த அல்பத்திலே இருக்கிறது. அதைவிட இரண்டு மூன்று காதல் பாடல்கள் இருக்கின்றன.
இப்படியான முயற்சிக்கு நீங்கள் அதிகம் செலவளித்திருப்பீர்கள் ஆனால் இந்த இசைத்தட்டுக்கு வைத்திருக்கின்ற விலை என்பது குறைவாகத்தான் இருக்கிறது இல்லையா?
ஆமாம், குறைவுதான் கிட்டத்தட்ட ஆயிரம் பவுண்சுகளுக்கு மேலே இதற்கு செலவளித்திருக்கிறேன். ஆனால் நான் எங்களுடைய ஆக்களுக்கு free கேட்டு பழகியபடியால் ( சிரிக்கிறார்). அதனால் ஆன ஆக்களிடம் போய் சேரவேண்டும் என் நினைக்கிறேன். சில விசயங்கள் அதாவது இராவண்ணன் பாடல்கள் போய்சேர்ந்தால் இது ஒரு வித்திஉஆசமான எண்ணத்தை உருவாக்கும் கடவுள் என்ற பாடல் ஒரு வித்தியாசமான எண்ணத்தை உருவாக்கும். கொஞ்சம் கூடிய விலைக்கு விற்றால் நிறைய பேருக்கு போய்ச்சேராது. கருத்து போய் சேரவேண்டும். எழுத்தளனாக இருந்தாலோ அல்லது சாதாரணமாக எந்த துறையில் இருப்பவருக்கும் அவர் சொல்லுகிற விடயம் மக்களிடையே போய் சேரவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு நான் அதிகளவான விலையை பொட்டுவிட்டால் மக்களுக்கிடையே போகாது. அதானால் தான் டொனேஷன் என்று பெயர் இட்டுள்ளேன், அதாவது அவர்களே தீர்மானிக்கட்டும் என்று. பிறகு இங்கு ஒரு பிரச்சினை வந்தது இங்கு (இலண்டன்) நாங்கள் சிடி விற்க இயலாமல் போய்விடும். சிலர் சீடி கேட்பார்கள் அதனால் சீடி விக்கிற கடையில கொடுத்து விட்டு ஷீரோக்கி கொடுத்தால் 1பி யையும் கொடுத்தி பாட்டு எடுத்துட்டு போவாங்கள் சீடி அப்படியே அதிலேயே இருக்கும். அப்படியான பிரச்சினை வந்தது.
அப்போது நான் நினைத்தேன் 4 பவுண்ஸ்சுக்கு கொடுப்போம் எண்டு. சிலர் 5 பவுண்ஸ்சுக்கு கொடுப்போம் எண்டு சொன்னார்கள் எனக்கு அதில அவ்வள்வு உடன்பாடு இருக்கவில்லை. 4 பவுண்ஸ் காணும் என நினைத்தென். இவ்வளவு காலம் வெளியிட்ட எந்த சீடியாலையும் எனக்கு வருமானம் வரவில்லை. போட்ட காசு எப்பவுமே வந்ததில்லை. இந்த பக்கத்தை காசு அல்லௌ பொருளாதாரத்துக்கன பக்கமாக நான் பாக்கவில்லை. எனது பொருளாதாரம் எனது வேலை எண்டு வேற பக்கமாக வைத்துக்கொள்வோம். இதை ஒரு பக்கம் வைத்துக்கொண்டேன். இதனால் எனக்கு இலகுவாக எதை எடுத்தலும் செய்யலாம். காசு எண்டு எடுத்தால் நான் ஜனரஞ்சகமான பாடல்களை உதாரணமாக அடிமேல் அடி அல்பத்தில் வருகின்ற Tooting பக்கம் மாதிரி பத்து பாடல்களை அடித்து விட்டால் நானும் இளைஞர்கள் மத்தியில் பயங்கரமான பிரபல்யம் அடைந்துவிடுவேன் காசும் எனக்கு பயங்கரமாக வரும். அது எனக்கு நோக்கமாக இல்லை. அதனால் தான் ஆக்களிடம் சேரவேண்டும். சொல்கின்ற விசயங்கள் அவர்களிடம் போய் சேர வேண்டும். ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்க வேண்டும். நான் சிந்திப்பதை விட அவர்கள் வேறு வேறு கோணத்தில் எல்லம் சிந்தித்து கொண்டிருப்பார்கள். அதனால் இதை ஒரு சமூக எண்ணமாகத்தான் நான் பார்க்கிறேன்.
இதுவரை உங்களுடை எத்தனை அல்பங்களை வெளியிட்டிருக்கிறீர்கள்?
2005இல் சிங்கிள்ஸ், 2007இல் அடிமேல் அடி, 2010இல் அணையாது என்று சொல்லி ஏற்கனவே வெளியிட்ட எமது விடுதலை சம்பந்தப்பட்ட 12 பாடலகளை எடுத்து ஒரு சீடியாக, முள்ளிவாய்க்காலில் இருக்கின்ற மக்களுக்காக என்று இங்கு இருக்கின்ற தமிழ் அமைப்புகளிடம் கொடுத்திருந்தேன். அதைவிட இப்போது இராவண்ணன்.
எங்களுடைய மக்களுக்கு உங்களுடைய இப்படியான இசையார்வத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
(யோசிக்கின்றார்) நான் என்னுடைய அனுபத்தைதான் சொல்ல முடியும். அவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்ற அளவுக்கு நான் இல்லை. அதாவது நான் செய்கின்ற விடயங்கள் என்னப்பொறுத்த வரையில் ஒரு alternative அதாவது ஒரு மாற்றான கலைஞனாகத்தான் பார்க்கிறேன். அதாவது சினிமாவாக அல்லது ஜனரஞ்சகமான என்று சொல்லிக்கொண்டு அல்லது consumer culture என்று சொல்வார்கள் அதாவது நுகர்வேர் கலாச்சாரம். விற்கிறதுக்கு ஏற்றமாதிரியான பொருட்களை செய்யாமல் அதற்கு எதிராக நல்ல பொருட்களை செய்ய வேண்டும். பயனுள்ள விடயங்கள்ஐ செய்ய வேண்டும் என நினைகிற மனிதன். அது சம்மந்தமாகத்தான் நான் இதிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அப்படியானவர்கள் தான் எங்களுடைய சமுதாயத்திற்கு தேவை என்று நினைக்கிறேன். விற்பதற்கும் அல்லது ஜனரஞ்சகமக பாடல்களை அடிப்பதற்கு எல்லோராலும் முடியும். எப்பவுமே செய்து கொண்டிருக்கலாம். ஆனால் எவ்வளவோ பேருக்கு திறமை இருந்தும் சமூக அக்கறை சமூகத்தை பற்றிய விளக்கங்கள் இருந்தும் அவர்கள் தங்களுடைய புலமையை காட்டிக்கொள்வதற்காகத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடன் பேசும் போது சொல்வார்கள் அப்படி பாடல்களை அடித்துவிட்டால் யாருமே கேட்கமாட்டர்கள் என்று. அதையும் ஒரு பக்கத்தில் செய்துகொண்டிருந்தால் சமூகம் சம்பந்தமானதும் செய்யவேண்டும். ஏனென்றால் என்றில்லாமல் சமூக அளவிலும் நாங்கள் முன்னுக்கு வர வேண்டும் என்றும் ஒரளவுக்கு நாங்கள் வளர வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். ஏனென்றால் எங்களுடைய பிரச்சினை என்பது எங்களை பல விடயங்களை விட்டு விட்டு தனியே ஒரு பக்கத்திற்கு எங்களை கொண்டு போய் விட்டது. எங்களுடைய அவதானம் முழுக்க இந்த போராட்டதின் மேல் இருந்த படியினால், ஆனால் அது முக்கியம் அதில் எந்த கேள்விக்குமே இடம் இல்லை. ஆனால் மற்ற பக்கத்தில் நாம் வளரவில்லை.  அதாவது எமது மனத்தினை அல்லது சிந்தனை ஓட்டங்களை பல பக்கங்களில் செலுத்தினால் எங்களுடய பார்வை விசாலமானதாக இருக்கும். தனியே ஒன்றில் என்று இல்லாமல். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் இப்படியேல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.
நிச்சயமாக அந்த வகையிலே சுஜித் உங்களுடைய இந்த புது முயற்ச்சி இராவண்ணன் என்ற இசைவட்டு நிச்சயமாக இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பது தான் எமது அவா. அதுமட்டுமன்றி தொடர்ந்து வரும் உங்களுடைய படைப்புக்களை எமது மக்களால் போற்றப்படவேண்டும் அவற்றை விலை கொடுத்து வாங்கி உங்களுடைய உழைப்புக்கு ஒரு மதிப்பை கொடுக்க வேண்டும் என்பது தான் எமது அவா. அதற்கு எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
நண்றி பிரபா. எனக்கு இந்த வாய்ப்பை தந்தமைக்கும் என்னைமாதிரியான இளைஞர்களையும் எங்களுடைய கலைஞர்களையும் வளர்க்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு நன்றி, உங்கள் வானொலிக்கும் நன்றி. கேட்டுக்கொண்டிருக்கும் அனைத்து நேயர்களுக்கும் பிந்திய தைத்திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்
மிக்க நன்றி சுஜித்
 
www.vaasal.kanapraba.com/?p=183

Comments are closed.

 

 
 
previous next
X