Kavippongal – Deepam TV


 
தை பிறந்தால், தை பிறந்தால்
எதையும் இருமுறை அழுத்திச் சொல்லின்
அதுவும் கவியாகும் என்ற வழக்கமிருப்பதால்
இதையும் இரு முறை அழுத்திச் சொல்லியாயிற்று
எனவே இதுவும் கவியாயிற்று
உழவர்க்கெல்லாம் தமிழருக்கெல்லாம்
ஒரு திருநாள், பெருந்திருநாள்,
‘எங்கள் தைத்திருநாள்’
வேலைத்தலத்து பண்டிகை உபரித் தொகையென்றும்
வீதிகளில் வான வேடிக்கைகள் என்றும்
தீபாவளி தலை நிமிர்த்தி நிற்க
எங்கள் தைத் திருநாள்
கைபேசிக் குறுஞ் செய்தியாய்
சுருங்கிப்போய் விட்டது.
சமணம் சமயத் தீபாவலி (தீப-ஆவலி)
இன்று இந்து சமயத் தீபாவளியாய்
இடத்திற்கிடம் வெவ்வேறு காரணம் சொல்லி
விசாலித்து நிற்க, விலாசம் இழக்கும் – எம்
தமிழ்த் திருநாளின் அவசியம் சொல்லி
ஊடக்காரர்கள் தான் அதை
உயர்த்தி நிறுத்த வேண்டும்

தை பிறந்தால் வழி பிறக்குமா
இல்லை தொடர்ந்தும் வலிதான் பிறக்குமா – என்று
கிலிதான் பிறக்கிறது எனக்கு
கலையென்ற பெயரில் கபடமும்
நாகரீகம் என்ற பெயரில் நாசங்களும்
தொழில்நுட்பம் என்ற பெயரில் தொல்லைகளும் தான்
இன்று பரவலாய்க் கிடக்கின்றன
இப்பொழுதே இங்கே ‘பரவலாய்’ என்பதை
அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள் – காரணம்
இதற்காய் பின்னர் நான் உங்களிடம்
அடி வாங்கத் தயாராய் இல்லை
முழுமையாய் அல்ல
பரவலாய்க் கிடக்கின்றன
ஒரு மனிதனின் எண்ணம்தான் அவன்! அல்லது அவள்
எண்ணம் உருவாகும் தொழிற்சாலை சமூகம்
இந்த முதலாளித்துவம் தந்த சமூகம்
எங்களுக்கு நஞ்சூட்டிக் கொண்டிருக்கிறது
பணம் சேர், அடுத்தவனிலும் உயர்,
முடிந்தால் பிரபலமாகு, முக்கியமாய்
முக்கியமாய் பயனில்லை எனினும் வாங்கு!

அன்பாய் இரு, பண்பாய் இரு, உதவி செய் முடியாவிடில்
உபத்திரபம் ஆவது செய்யாதே என்பவை எல்லாம்
காலாவதியான கடைச் சரக்காகி விட்டது
இப்படிப்போனால் வழி பிறக்குமா? வலி தொடருமா?
என் கிலியில் நியாயம் இருக்கிறது
ஒரு இனம் தனித்து நிலைத்து நி;ற்க வேண்டுமென்றால்
அதற்கான  கலை பண்பாடு அவசியம்
இன்று ஈழத்தமிழனின் கலை
கோடம்பாக்கத்திற்குள் சிக்கிக் கிடக்கிறது

சொந்த நாட்டில் பஞ்சமே வந்தாலும்
பரவாயில்லை என்ற நிலையில்
பஞ்சு வசனங்களை நம் நாளைய தூண்களாகிய
பிஞ்சுகள் பேசி, இன்று புளகாங்கிதம் அடைகின்றன

அரிவாள் பழக்க வழக்கத்தையும்
அடியாள் பழக்க வழக்கத்தையும்
பெண்ணைப் போதைப் பொருளாக்கியும்
நவ நாகரீகம் என்ற பெயரில்
நலம் கெட்ட செயல் புரியும்
‘கலை வளர்க்கிறோம்” பேர்வளிகள் பலரை
அதற்குள்தான் அதிகமாய்ப் பார்க்க முடியும்

இவர்கள் பரிசைகேட்டினைப் போய்ப் பார்க்கவே,
நாம் 10 பவுண் குடுக்கவேண்டும்
போரால் பொசுங்கிப் போய் வாழ வழியற்ற
மக்கள் இருக்கும் அதே நாட்டிற்குள்
தலை தளபதி என்று கட்டவுட்களுக்கு
பாலூற்றி அபிஷெகம் செய்யும்
அசிங்கங்கள் எல்லாம்
அரும்பத் தொடங்கி விட்டன

எங்கு போகிறது?
எவர் பின்னே போகிறது
என் ஈழத்தமிழினம்?
கடுகு சிறிதெனினும் காரம் பெரிது என்பது போல
பெயரில் மாத்திரம் தான் அது சின்னத்திரை
அது தரும் சமூக அழிவிற்கு இல்லை வரையறை
அதன் அதிர்வுகள் போகும் கர்ப்பிணித்தாயின்
குழந்தை தூங்கும் கருவறை
என் தாய்மார்கள் எல்லாம் அந்த
சீரழிந்த சின்னத்திரைக் கிரை

வக்கிரகுணம், வன்புணர்வு
கள்ளத்தொடர்பு, கொலையெண்ணம்
பொறாமை, பேராசை, ஆக
மலிந்த சிந்தனைதான்
அதன் குணாதிசயம்
தெரிந்தும் அடிமையாகிறோமே – அதுதான்
உலகின் புதிய எட்டாவது அதிசயம்

நாங்களும்
கல் தோன்றி மண் தோன்றாக்
காலத்தே வாளோடு முன் தொன்றிய
மூத்த தமிழ்க்குடி என்று கூறியபடி
எம் இளையோர்கள் இங்கே
ஈழக்கலை வளர்க்கப்
புறப்பட்டு இருக்கிறார்கள்
என் அருமைச் சகோதரர்களே!
எம் இனத்திற்கான கலை
எம்மையும் எம் வாழ்வியலையும்
பிரதி நிதித்துவப் படுத்தி
நம் ஒவ்வொருவரின் ரசனையினையும்
சிந்தனா சக்தியினையும் உயர்த்தும்
சமூக வளர்ச்சிக்கானதாய் இருக்கவேண்டும்,
இவையல்லாமல் அவர்களைத் துரத்திவிட்டு
நாங்களே இங்கே குப்பை கொட்டுவோம் – என்று
நீங்கள் சொல்வீர்களாயின்
அதற்கு அவர்களே கொட்டலாம்

சிந்திப்போம் செயற்படுவோம்!
உலக மயமாக்கலும் தொழிநுட்பமும் இன்றைய
உலகத்தினை ஓர் சிற்றூர் போலச்
சுருக்கி விட்டதென்னவோ உண்மைதான்
ஆனால் அது எம்மை
சுதந்திரமாய் இருக்க விட்டதா?
நாங்கள் கதவுகளையும் சாளரங்களையும்
அடைத்து வைத்தாற் கூட
மடியில் மடித்து வைத்திருக்கும்
பதினைந்து அங்குலப் பெட்டி வழியே
கொட்டி விடப்படும் குப்பைகளால்
நிறைந்து வழிகிறது எம் தலை

பயனில்லை எனினும் வாங்கு என்பதைத் தாண்டி
பயனற்றதையும் பார், ரசி, ஏற்றுக்கொள், என்கிறாக்கி விட்டது
இலாபமொன்றையே மொழியாய்ப் பேசத்தெரிந்த
இந்த முதலாளித்துவ உலகம்

சமனிலை சக்தியிளந்து
சரிந்து சவமாக்கப் பட்டதால்
வாழ்வில் ‘வெற்றியடை” என்ற
மாயக் கொடியின் கீழ்
பொருள் தேடி புகழ் தேடி – அடுத்தவர்
நலத்தில் சிறிதும் அக்கறை இன்றி
நானே நானே நானே என்று
தமக்குள் மந்திரம் ஓதியபடி இங்கு
மந்திரித்துக் கடிவாளம் பூட்டிய
குதிரைகளாய் என் சமூகம்!

தேவையற்ற பொருளை
இல்லாத பணத்தினால்
இணையத்தில் தேடி வாங்கி
பிடிக்காதோர்க்கு பீடிகை காட்டியே
கடனாளியாகிறாய் நீ 

பிறெய்ஸ் த லோட்டும்
அஸ்ஸலாமு அலைக்குமும்
சொல்லும் அனேக வாய்களுக்கு
வணக்கம் சொல்லத் தயக்கம் இருக்கிறது

நடுகல் நம்பிக்கை, பழங்குடி நம்பிக்கை,
சிறுதெய்வம், பெருந்தெய்வம், கன்னித்தெய்வம், குலதெய்வம்
ஆசிவகம், சமணம், பௌத்தம்
என்று பல மார்க்கம் பார்த்தது தமிழ்
இன்று அனைத்து சமய, பிராந்திய
நம்பிக்கைகளினதும் கூறுகளை
இந்து சமயம் உள்வாங்கி
கதையெழுதித் தன்னுடமையாக்கியதால்
தமிழும் இந்துவும் ஒன்று போலாயிற்று

அதனாலேயே மதம் மாறியவன்
தான் தமிழ் இல்லையென்று
மனம் மாறுகிறான்
மொழி கடந்தால்லவா இறை நம்பிக்கை
கண்டவுடன் வணக்கம் சொல்கிறான் ஜி
தமிழ்ப் பற்றாம் எனக்கு
கண்டவுடன் ‘ காய் ‘  சொல்கிறாய் நீ
ஆங்கிலப் பற்றா உனக்கு

காலனித்துவ மனோ நிலை
கடுகளவும் கரையாமல்
கயிறு திரித்தாற் போல்
கபாலமெல்லாம் முறுக்கி நிற்க

அம்மா அப்பாவையே அடியோடு அகற்றி
மம்மியையும் டாடியையும்
மகிழ்வோடு நீ மழலைகள்
நாக்கில் ஏற்றுகிறாய்
உன் மடமையான செயலாலே
பொங்கலென்ன ஒரு நாள்
தமிழே தூக்கில் ஏற்றப்படும்

அன்புடையவர்களே
உங்களை உயர்வாய் எண்ணுங்கள்
அடுத்தவனையும் அப்படியே எண்ணுங்கள்
விரும்பின் வானம் பாருங்கள்
நிலத்தில் நடவுங்கள்
இயற்கையை மதியுங்கள்
இயற்கையை ரசியுங்கள்
மனிதம் வளருங்கள்
முக்கியமாய் எளிமையாய்
வாழப் பழகுங்கள்

தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
ஒவ்வொர் வருடமும் தை பிறக்கும்
ஒவ்வொர் நாளும் புதிதாய்
நாம் பிறப்போம்
தை பிறந்தால் வழி பிறக்கும்

Comments are closed.

 

 
 
previous next
X