Interview – Kumudam Theeranadhi

தமிழில் சொல்லிசையின் எழுச்சி : சுஜீத்ஜீ
– உரையாடல் – சேனன்|
“நான் வெறும் பாட்டு எழுதுபவன் அல்ல. நான் செய்யும் சொல்லிசைக்கு வரைவிலக்கணங்கள் இல்லை” எனும்  சுஜீத்ஜீ தமிழில் ராப் -சொல்லிசைக்கு புதிய பரிமானத்தை கொடுத்துவரும் கலைஞன்.
ஊலகெங்கும் பரந்து சிதறிக்கிடக்கும் தமிழ்பேசும் மக்களிடம் இருந்து பல்வேறு ஆளுமைகள் உருவாகத் தொடங்கியிருக்கும் காலமிது. மாயா ஆங்கிலத்தில் பாடுவதால் இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர். கோடம்பாக்கச் சினிமாப் பாடல்களை உடைத்துத் தமிழில் தனித்துவமான இசையை நிலைநாட்டுவது கலைஞர்களுக்குப் பெரும் சவாலாக தொடர்ந்து இருந்துவருகிறது. இதையும் மீறி  சுஜீத்ஜீ சந்தோர்ஸ் போன்றவர்கள் பாரிய பாதிப்பை புலம் பெயர் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
“சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே?” என்ற பாடல் அல்லது “சுராங்கனி சுராங்கனி” போன்ற பழைய பாடல்கள் தான் இன்றும் இலங்கையில் இருந்து தோன்றிய பிரபலமான பாடல்களாகக் கருதப்பட்டு வருகிறது. இதை மீறி  சுஜீத்ஜீ முதலானோர் தமிழிசையை உலகத் தளத்துக்கு நகர்த்துவதற்கான முனைப்பில் இருப்பது ஆறுதல் தருகிறது.
சொல்லிசைக்குப் பழக்கப்படாதவை தமிழ்ச் செவிகள். அமெரிக்க ஆபிரிக்க சொல்லிசைகளை மேய்ந்து வெட்டி ஒட்டும் கோலிவுட் (கோடம்பாக்கத்து சினிமா) இசை எந்த எல்லைகளையும் உடைக்கத் தயாராக இல்லை. இருப்பினும் கோலிவுட் இசை வெளியையும் கைப்பற்றாமல் ஒரு இசைக் கலைஞன் நிமிர முடியாத முட்டுக்கட்டை ஒன்றிருக்கிறது. அதற்காக சில ‘சனரஞ்சக’ சேட்டை இசைகளையும் செய்து காட்ட வேண்டியிருக்கிறது என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்கிறார் சுஜீத்ஜீ . “ரூட்டிங் பக்கம் போற பிள்ளை என்னக் கொஞ்சம் பாரன்” பாடல் அத்தகையது என்கிறார். ஆனால் அப்பாடல் பல இளையோரின் மனதை கவர்ந்த முக்கிய பாடலாக இன்று மாறிவருகிறது.
“அண்ணனிட்டச் சொன்னா என்ன நானா ஒடிப்போவன்
அப்பரிட்டச் சொல்லு பிள்ளை நாளை வீட்ட வாறன்” என்று தொடங்கி
“பிம் ஒண்டை வாங்கிக்கொண்டு ஊரைச் சுற்றி வந்திடுவம்
காசு கஷ்டம் வாந்தாச் சொல்லு மட்டை போட்டுத் வெண்டிடுவம”
என்று முடியும் இப்பாடலில் ஈழத்துப்பாணி வசனங்கள் தெரிந்தாலும் பாடல் அமைப்பு முறை புதியதாகவே இருக்கிறது.
“மெலடி செய்யச் சொல்லி வரும் அழுத்தம்” பற்றி சலிக்கும் அவர் ‘கருத்து அடிக்க வேண்டும் என்று தான் இசைவாளெடுத்தனான்’ என்கிறார். சாதியம் பென்ணொடுக்குமுறை சீதனம் போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பேச விருப்பம் என்கிறார். பெரியாரைப் பற்றிய ஒரு சொல்லிசையைத் தயாரித்துக கொண்டிருக்கிறார். ஆனால் தான் வெறும் ‘கருத்துக் கந்தசாமி’ இல்லை என்பதையும் கலைக்கு உண்மையுடன் மறுக்கிறார்.
‘எதிர்ப்பு இசை தமிழில் இல்லை. இது வளரவேண்டும்’ என ஏங்கும்  சுஜீத்ஜீ -‘காப்புலி கத்தியது’ என்ற துவேச அடையாளத்துக்குள் சொல்லிசையை புதைத்து சங்கராபரனத்தை வளர்க்க இயங்கும் பண்டைத்தமிழ் பாரம்பரியத்தை உடைத்து வரும் இளையோரில் முக்கியமானவர்.
கலாச்சாரக் கட்டுகளை உடைத்தல் -கோர்ப்பரேட்டுகளை எதிர்த்தல் என்று தமிழிசையின் தளத்தை மாற்றும் ஒரு வகை இசைப்புரட்சி என்று இந்த ஆரம்ப முயற்சிகளை குறிப்பது அளவுக்கதிகமான கூற்றல்ல. காசுக்காக கலை செய்பவன் அல்ல நான் என்பதையும் அடித்துச் சொல்கிறார். ‘ஒரு சின்ன வட்டத்துக்குள்ள தயாரிப்புக்கான காசை அமத்திடலாம். பிறகேன் வியாபாரம்’ என்கிறார்.
கவனத்துக்குள்ளான இவரது முதலாவது அல்பமான -இராவணன்- ஒரு புதிய முயற்சி. அந்த அல்பத்தில் வெளியான ‘கடவுள்’ பாடல் ஒரு முக்கியமான பரப்புக்கு தமிழிசையை நகர்த்துகிறது. கடவுளைக் காவல்காரனாக பாவிக்குது சனம் என்ற பாணியில் வித்தியாசமாக ஆரம்பிக்கும் இப்பாடல் “கள்ளச்சாமி பையுக்க நுழைக்கிறான் காணிக்கை-கள்ளங்கள வளக்கிறார்” என்று ஓ.சாமி வியாபாரத்தை சாடுகிறது. “மூளையைக் கழட்டி வைச்சுப் போட்டா ஊர்ல சனம் திரியுது” என்று பகிடி செய்கிறது இப்பாடல்.
இலங்கை அரசு தமிழ்பேசும் மக்களை வேட்டையாடிக் கொண்ருந்த தருணத்தில் இவர் வெளியிட்ட பல பாடல்கள் புகழ் பெற்றவை. தெருத்தெருவாக போராட்டத்தில் குதித்த பல இளைஞர்களை ஊக்குவிப்பதாக இருந்தவை அப்பாடல்கள். தமிழ் ஊடகங்கள் எங்கும் அப்பாடல்கள் திரும்பத்திரும்ப ஒலிபரப்பப்பட்டது.
“தமிழ் தேசியம் சார் பிரச்சினைகளை நான் பேசும்போது மட்டும்தான் ஊடகங்கள் கண்டு கொள்கின்றன. கடவுள் போன்ற ‘சீரியஸ்’ தமிழ் சொல்லிசையை இவர்கள் தவிர்த்துக்கொள்கிறார்கள்’ என்று ஏக்கப்படுகிறார். ஆனால் இளையோரிடம் பெருகிவரும் மதிப்பு தமிழில் சொல்லிசையை நிறுவுவதற்கு நிச்சயமாக உதவும்.
தமிழ் நாட்டில் இவரது சொல்லிசை கேட்கப்பட வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் செம்மொழி இசையை விமர்சித்து  சுஜீத்ஜீ அடித்த இசை விமர்சனம் கேட்கப்படவேண்டியது. இளைஞர்கள் எதிர்ப்புக்கலை நோக்கி நகர வேண்டும். கோலிவுட் மெலடிகளை உடைக்க இந்த நகர்வு தேவையானது.
இசை வியாபாரத்துக்கானது என்று நிறுவப்பட்டுவருவது தகர்க்கப்படவேண்டும்.
இசையை வியாபாரிகளிடம் இருந்தும் ஆதிக்க சாதி-வர்க்க ஆளுமைகளிடம் இருந்தும் கைப்பற்றவேண்டும். ஒடுக்கப்படும் மக்களின் பாடல்கள் பரவவேண்டும்.
மக்கள் பற்றிய பாடல்களை மக்கள் கேட்க மாட்டார்கள் என்று பொய் வியாக்கியானம் செய்து – அடக்குமுறைக் கலாச்சார விழுமியங்களை காவல்காக்கும் ஊடகமாக இசையைப் பாவிக்கும் வெட்கக்கேடான செயல் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும்.
சொல்லிசை மக்களுக்கானது – மக்களைப் பற்றிப் பேசுவது.  சுஜீத்ஜீ போன்ற வீரியம் மிக்க ஆழுமைகள் மூலம் சொல்லிசை எழுச்சி பெறுவது – பரவலாக கேட்கப்படுவது இன்றியமையாதது. தெரிந்து கொண்டு தான் புறக்கணிப்பு செய்கிறார்கள் அடக்குமுறையின் காவலர்கள். அவர்களையும் உடைத்துத் தான் சொல்லிசை எழவேண்டியுள்ளது. “இந்த வட்டம் போதும்- புதிய புரட்சி உன்னுள் புரண்டிட வேணும்” என்று பாடும் அவர் மரபார்ந்த புத்தியின் மேலான தனது வெறுப்பை அழுத்தி வைக்கிறார்.
“துடைக்கவே வேணும் நீ துடைக்கவே வேணும் – உன்தன்
தூசிபிடிச்ச மூளையை துடைக்கவே வேணும்” என்று பாடுகிறார்.
“நான் விற்பனைக்கற்ற கலைஞன்
சலசலப்பை விட்டுச் சரியாகச் செய்வோம்”
என்று பேசும் சுஜீத்ஜீ யின் அதிர்வுகள் எம்மிலும் பரவுகிறது.
எதிர்ப்புக் கலைக்கு இன்னுமொரு உயிர் கிடைத்திருப்பதில் மனம் ஆறுகிறது.

Comments are closed.

 

 
 
previous next
X