Maasilan Review

நல்லவராவதும்… தீயவராவதும்…

Arun TamilStudio  [ குங்குமம் வார இதழுக்காக 15-12-2014 ]
——————————————————————————————————————————————————–
குறும்படம்: மாசிலன் | இயக்கம்: சுஜீத்ஜி
நேரம்: 10.45 நிமிடங்கள் | ஒளிப்பதிவு: S. சாந்தன் | இசை: திசாந்தன்
——————————————————————————————————————————————————–

இந்தியாவில் பெரும்பாலான தலைவர்களின் சினிமாவை பற்றிய பார்வை தவறாகவே இருக்கிறது. காந்தி முதல் பெரியார் வரை சினிமாவை ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக பார்க்கத் தவறிவிட்டார்கள். ஆனால் ரஷ்யாவின் லெனின் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே “எல்லாக் கலைகளை விடவும் சினிமா முக்கியத்துவம் வாய்ந்த கலை’ என்று குறிப்பிட்டார். எல்லா கண்டுபிடிப்புகளுமே மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் சினிமாவின் கண்டுபிடிப்பு மனிதர்களின் மனதில் உளவியல் பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. சினிமாவின் மையக் கருத்தாக்கத்தை புரிந்துக்கொண்டால், மனிதர்களில் மன ரீதியான மாற்றத்தை எற்படுத்திவிடுவதில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்காது.

சினிமா முற்றிலும் பொழுதுபோக்குக்கான கலை என்கிற அளவில் மட்டுமே அதனை அணுகினால், அது கத்தியின் கூர் முனையை கையில் பிடித்துக்கொண்டு, எதிராளியை தாக்குவது போன்றதாகிவிடும். சினிமா மட்டுமல்ல, எந்த ஒரு கண்டுபிடிப்பையும் நல்ல மாற்றத்திற்காக பயன்படுத்த கற்றுக்கொள்ளும் சமூகமே தன்னை செம்மைப் படுத்திக்கொள்ளும். அதன் மூலமே அந்த சமூகம் வலிமை மிக்க சமூகமாக மாறும். தனிமனித மாற்றத்தை தொடங்கி வைப்பதில் இருந்து அதனை சாத்தியப்படுத்தவும் செய்யலாம். அப்படி தனிப்பட்ட மனிதனின் வாழ்வியல் மாற்றத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் “மாசிலன்”.

புலம்பெயர் தமிழர்களின் விவாகரத்து வாழ்க்கையின் பின்னணியில் அவர்களின் பிள்ளைகள் எவ்விதம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையசரடாகக் கொண்டு மாசிலன் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் தொடக்கத்தில் தன்னுடைய மகனை, முன்னாள் மனைவியின் வீட்டில் இருந்து அழைத்துப் போக வருகிறார் தகப்பன். குழந்தை யாருடன் வாழ்வது என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது. தகப்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் மகன், “அப்பா நீங்கள், விசாவுக்காகத்தான் அம்மாவை திருமணம் செய்துக்கொண்டீர்களா?”, என்று கேட்கிறான். “யார் சொன்னது, வீட்டில் அம்மா ஏதும் சொன்னார்களா, அம்மம்மா ஏதும் சொன்னார்களா?”, என்று கேட்கிறார் தகப்பன். பின்னர் கோபத்துடன் மனைவியின் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டுவிட்டு திரும்புகிறார். இதன் விளைவாக, பிள்ளை அம்மாவுடன் வசிக்க வேண்டும் என்று தீர்ப்பாகிறது. “நான் என்னுடைய தகப்பனை இருபத்தைந்து வயதில் இழந்தேன். ஆனால் என்னுடைய மகன், அவன் தந்தையை பத்து வயதிலேயே இழக்கப்போகிறான்”, என்கிற கணவனின் வார்த்தையில் இருக்கும் உண்மையையும், தகப்பனின் பரிசத்திற்காக ஏங்கும் பிள்ளையின் பரிதவிப்பையும் உணர்ந்து தாய் என்ன முடிவு செய்தார் என்பதுதான் படத்தின் தொடர்ச்சி.

ஏன் இருவரும் விவாகரத்து செய்தார்கள் என்பதன் பின்னணியை பற்றி படத்தில் எவ்விதக் காட்சிகளும் இல்லை. படத்தின் மையசரடு, இருவரின் விவாகரத்தால் பிள்ளைகள் எப்படி பாதிக்கிறார்கள் என்பதுதான். அதற்கு, அவர்களின் விவாகரத்திற்கான காரணம் என்ன என்று பார்வையாளனுக்கு சொல்ல வேண்டியத் தேவையில்லை. எழுத்தாளர் கி. ராஜநாராயணன் சொல்வது போல், “ஒரு கதை எங்கிருந்து தொடங்குகிறது என்பது முக்கியமல்ல. ஒரு கதையும் எங்கேயும் தொடங்கலாம். எங்கேயும் முடியலாம். அது கதைசொல்லியின் ஆளுமையை பொருத்தது” என்பார். சமூகத்தின் பொதுபுத்தியில் எப்போதுமே, இருவேறு குணாதிசயங்களை கொண்டவர்கள் இருப்பார்கள். ஒன்று நேர்மறையாகவும், இன்னொன்று எதிர்மறையாகவுமே கட்டமைக்கப்பட்டிருக்கும். நம்முடைய புராணங்களும், இதிகாசங்களும் கூட நமக்கு நேர்-எதிர் பற்றித்தான் போதிக்கிறது. இதில் நேர்மறையான அல்லது சமூகம் போதித்த ஒழுக்கங்களை கடைபிடிப்பவர்கள் கதாநாயகர்களாக சித்தரிக்கப்படுவார்கள். ஆனால் உண்மையில் அப்படியான பிம்பங்கள் போலியான கற்பிதங்கள் மூலம்தான் உருவாகுகிறது. அப்படியான கற்பிதங்களை இந்த குறும்படம் உடைக்கிறது. படத்தில் மோசமானவர்கள் என்று யாருமே இல்லை.

சிறுவனின் பாட்டிக்கு, அவனது பெற்றோர்களின் திருமணத்தில் பெரிய மகிழ்ச்சி இல்லை என்பதை படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் உணர்த்தினாலும், அது அவளது பெண்ணின் மீது கொண்ட அன்பினாலேயே என்றும் உணர்த்தப்படுகிறது. சிறுவனின் தகப்பன் ஒரு காட்சியில் சொல்வது போல, “சில நேரங்களில், சில விசயங்களில் நாம் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. பிழை சொல்ல முடியாது”. மோசமான தாய், மோசமான தகப்பன், மோசமான உறவினர்கள், மோசமான மனிதர்கள் என்று நாம் யாரையுமே சுட்டிவிட முடியாது. மோசமான சம்பவங்களே மோசமான சில எண்ணங்களை உருவாக்குகிறது. அந்த எண்ணங்களை சுமப்பவர்கள், அந்த நேரத்தில் மோசமானவர்களாக இருக்கிறார்கள் அவ்வளவுதான். படத்தில் தலைப்பை போலவே, இதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் “மாசிலன்” தான்.

இறுதியில் பிள்ளை நினைக்கும்போதெல்லாம் தன்னுடைய தகப்பனோடு சேர்ந்து வசிக்கலாம் என்று அவனது தாய் முடிவெடுக்கிறார். முதல் காட்சியிலேயே பிள்ளையும், முன்னாள் கணவனும் செல்வதை கண்கள் இமைக்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை காட்சி மூலம் உணர்த்துகிறார்கள். பிள்ளையும், தகப்பனும் நடந்து செல்லும்போது, கேமரா பின்னிருந்து அவர்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் கேமரா என்பது சிறுவனின் தாய்தான். தனிமையில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன், அவனது தாய் வரும் சப்தம் கேட்டதும், ஓடி சென்று அவளை கட்டியனைத்துக்கொள்வதும், பின்னணியில் குழந்தையை தூக்கி செல்லும் தந்தையை பார்த்துக்கொண்டிருப்பதும், சிறுவனின் தனிமை, தகப்பன் பாசம் இரண்டையும் கலந்து கவித்துவமாக பதிவு செய்தக் காட்சி.

படத்தில் காட்சி தொடங்குவதற்கு முன்னமே இசையும் தொடங்கிவிடுகிறது. ஆனாலும் சில இடங்களில் மௌனமும் இருக்கிறது. காட்சிகளின் பின்னணியில் வாத்தியக் கருவிகள் இசைக்கும்போது ஏற்படும் அனுபவத்தை விட, மௌனமாக நகரும் காட்சிகளே ஆக சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. இசையின் போக்கை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். மேலும், இந்த நாட்டில், சட்டத் திட்டங்கள் எல்லாமே பொம்பளைகளுக்கு ஆதரவாகத்தானே இருக்கிறது” என்று ஒரு வசனம் வருகிறது. அதனையும் தவிர்த்திருக்கலாம். இட ஒதுக்கீடு போலத்தான், பெண்களுக்கு ஆதரவான சட்டங்களும். அதை நாம் பல வரலாற்று சம்பவங்களின் பின்னணியில்தான் பிணைத்துப் பார்க்க வேண்டும். உணர்ச்சி பெருக்கின் வாயிலாக பார்க்க கூடாது.

இலங்கையில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்து, ராப் பாடகராக தன்னை தகவமைத்துக்கொண்ட சுஜீத்ஜி, சினிமாவின் மூலம், தன்னுடைய சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர். ஒரு திருமணத்தில், வீடியோ எடுத்து கொண்டிருந்த இவருடைய நண்பர், அந்த வீடியோவை திருப்பிக் கொடுப்பதற்குள்ளாக, அவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.
SGகதைக்கான வித்து அங்குதான் இவருக்கு கிடைத்திருக்கிறது. விவாகரத்து என்பது அடுத்த சந்ததியை எப்படி பாதிக்கிறது, குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கிறது என்பதை சொல்ல முற்பட்டதன் விளைவே சுஜீத்ஜியின் மாசிலன் குறும்படம்.
இவரது இன்னொரு குறும்படமான பாவம், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இக்குறும் படத்தினால் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார் சுஜீத்ஜி. மேலும் புலம்பெயர் தமிழர்களின் கிறித்தவ அமைப்புகளில் மலிந்திருக்கும் ஊழலையும், சுயநலப் பேராசைகளையும் முன்வைத்து @ஊழியம் என்றொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். தொடர்ச்சியாக குறும்படங்களை சமூக பிணி களையும் ஒரு பேராயுதமாகவே பயன்படுத்தி வருகிறார்.

 குறும்படத்தைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=GSv729tsl_8
——————————————————————————————————————————————————–
01
02
03

Comments are closed.

 

 
 
previous next
X