SONGS AND SHORT FILMS

சுஜீத்ஜியின் பாடல்களும் குறும்படங்களும்

–  ஜமுனா ராஜேந்திரன்
01

அறுபதுகளும் எழுபதுகளும் உலகெங்கிலுமிருந்த இளைய யுகத்தவருக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மாந்தருக்கும் கொந்தளிப்பான காலம். தேசிய விடுதலைப் போராட்டங்கள், மேற்குலகில் பாரிஸ் மாணவர் எழுச்சி, அமெரிக்காவில் பிளாக் பாந்தர்களின் எழுச்சி, இந்தியாவில் நக்சலைட்டுகளின் எழுச்சி, இவற்றின் பகுதியாக ஈழத்தில் தமிழின அடையாளத்திற்கான தேசியவிடுதலைப் போராட்டம் என அந்த நாட்களின் வெப்பமே ஒரு தலைமுறையை உருவாக்கியது.

கலாச்சார தளத்தில் ‘ஹிப் ஹாப்’ எனும் கலக வாழ்முறை கறுப்பின இளைஞர்களிடமிருந்து அமெரிக்காவில் முகிழ்த்த காலமும் இதுதான் ராப் எனும் வெட்டிப்பாடும் பாடல் வடிவும், கிராபிட்டி என அழைக்கப்பட்ட சுவரோவியம் வரைதல், பாப் மார்லி போன்ற பாடகர்களால் மூலிகை எனக் கொண்டாடப்பட்ட கஞ்ஜா புகைத்தல், முதலாளித்துவ எதிர்ப்புணர்வு என அனைத்தும் ‘ஹிப் ஹாப்’ எனும் கலக வாழ்முறையாக எழுந்தது.

திரைப்படங்கள், ஆல்பக் கலாச்சாரம் என இன்று நுகர்கலாச்சாரத்தின் அங்கமாக ஆகிவிட்ட ராப் பாடல் வடிவம் அதனது துவக்க காலத்தில் முழுமையாக எதிர் கலாச்சாரக் கவிதை வடிவமாக, மேடைப் பாடல் வடிவமாகவே இருந்தது. இங்கிலாந்தில் வாழும் பெஞ்ஜமின் ஜாப்னாயா போன்ற கறுப்பினக் கவிஞர்கள், அமெரிக்காவில் முதலாளித்துவ எதிர்ப்பைத் தமது கலாச்சார நடிவடிக்கையாகக் கொண்ட ‘பப்ளிக் எனிமி’ போன்ற குழவினர் ராப் வடிவத்தை அரசியல் எதிர்ப்பு வடிவமாகவே பாவித்தார்கள்.

தமிழக சினிமா நடிகர்களின் மீதான ரசிக மனோபாவம் மெல்ல மறைந்து தமிழின அடையாளம் குறித்த வேட்கையுடன் இரண்டாயிரத்தில் இங்கிலாந்திற்குப் புலம்பெயர்கிற சுஜீத்ஜிக்கு தனது அடையாள உணர்வையும் தனக்கு அந்நியமான புகலிட சமூகத்தின் பாலான கோபத்தையும் வெளிப்படுத்த ஒரு வெடிப்புறு வெளியீட்டு வடிவம் தேவையாக இருந்தது செவ்வியல் இசை மரபும் கச்சேரிகளும் தெய்வ கானங்களும் ஆதிக்கம் செலுத்திய புகலிடக் கலாச்சார வாழ்வில் தனது தமிழ் அரசியல் உணர்வும் சமூகக் கோபமும் கொண்ட பாடல்களுடன் பிரவேசிக்கிறார் சுஜீத்ஜி. அப்போது அவருக்குகந்த வடிவமாக ராப் வடிவத்தை அவர் கண்டடைகிறார்.

மைக்கேல் ஜாக்சன் போன்ற கறுப்பினக் கலைஞர்களின் வெகுஜனக் கொண்டாட்டப் பாடல்கள், இரவு விடுதிகளில் தமது களியாட்ட உணர்வை வெளிப்படுத்தும் வெள்ளையினப் பாடகர்களின் ஒளித்தட்டுகளையும் உடல்மொழியையும் தமிழ் உணர்வுக்குத் தகமாற்றி தமிழ்மொழியில் பாடல்புனைந்து அவரது தமிழணர்வுப் பாடல்கள் துவக்கத்தில் வெளியாகிறது. இதனோடு உலக தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்களான பிடல் காஸட்ரோ, சே குவெரா, நெல்சன் மண்டேலா போன்றவர்களின் ஆவணப்படக் காட்சிகள் பின்னணியாக, தமிழர்க்கு அவசியமான வீர உணர்வுப் பாடல்களையும் அவர் உருவாக்குகிறார். யார்க்கும் குடி அல்லோம், பிறப்பெடுடா, தமிழர்குடி, பகை, அடிமேல் அடி போன்ற சுஜீத்ஜியின் பாடல்களை இந்தத் துவக்க காலப் பாடல்கள் என நாம் வகைப்படுத்த முடியும்.

தமிழ் உணர்வு தொடர்பான வெடிப்புறும் காலகட்டப் பாடல்களின் கரு வெளிப்பாட்டு உணர்வு அனைத்தும் பிறிதொரு கட்டம் நோக்கி நகர்கிறது. புகலிட வாழ்வின் தனிமை, சமூகத்துடனான பகை, சகமனிதர்களுடனான போராட்டம், தமிழ் சமூகத்தின் அவப்பக்கங்கள் குறித்த சீற்றம் என்பன இப்போது இவரது பாடல்களின் கருக்களாக ஆகின்றன. அரசியலுணர்வு அல்லது மேற்கத்திய ராப் மற்றும் ஆவணப்படங்களின் தாக்கம் என்பன இங்கு இல்லாமலாகி முழுக்கவும் புகலிட வாழ்வின் அன்றாட வாழ்வு குறித்ததாக இவரது பாடல்கள் உருவாகின்றன. அசலான காட்சிகளையும் உறவுகளையும் இவர் படம்பிடிக்கத் துவங்குகிறார்.

தமிழ்மொழி ராப் என்பது இக்கால கட்டத்தில்தான் இவரிடமிருந்து உருவாகிறது. இராவண்ணன், பொறாமை, விஷம் (கதையல்ல நிஜம்), பொய், கோழை போன்ற பாடல்களில் துரோகிப் பட்டம் கட்டும் கலாச்சாரம், இயந்திர வாழ்வில் அகப்பட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையின் மரணம், பெண்களைக் குறித்துப் புறம்பேசி அவர்களது வாழ்வை அழிக்கும் மனப்பான்மை, காதல் பிரிவு போன்றவற்றை இந்தக் கட்டத்திலான பாடல்கள் பேசுகின்றன.

mrg

தொழில்நுட்பம் எனும் அளவில் துவக்க காலப் படங்களோடு ஒப்பிட அசலான வெளிப்புறப் படப்பிடிப்பு, பொருத்தமான நடிகர்கள், நடிகைகள் என அசலான படைப்பின் பண்புகள் கொண்டதாக இக்காலப் பாடல்கள் உருவாகின்றன. ஐரோப்பிய தமிழ் ராப் பாடல்களின் பிதாமகனாக சுஜீத்ஜி வெளிப்பட்ட காலம் இது. எனினும் ஒளிப்படம் எனும் அளவில் கச்சிதமான படத்தொகுப்பைக் கொண்டதாக இக்காலப் பாடல்கள் இருந்தன எனச் சொல்ல முடியாது. எனினும் பொறாமை எனும் பாடல், பாடகர் எனும் அளவிலும் படத்தொகுப்பு எனும் அளவிலும் அவரது பிற்காலத்திய பாடல்கள் மற்றும் குறும்படங்களின் நேர்த்திக்கான முன்னோடியாக இருந்திருக்கிறது என இன்று சொல்ல முடிகிறது. இத்தருணத்தில் சுஜீத்ஜி புகலிட வாழ்வின் சமூகம் மற்றும் உறவுகள் சார்ந்ததாகத் தனது படைப்புக்களைத் தேர்ந்து கொள்கிறார். அவரது அரசியல் என்பது இப்போது புகலிட வாழ்வின் அரசியல் விமர்சனமாகப் பரிமாணம் பெறுகிறது.

இக்கால கட்டம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான காலகட்டம் என நாம் அரசியல் மொழியில் குறிப்பிடலாம். பெரியாரியம் மிகப் பெரும் வீச்சுடன் புகலிட நாடுகளில் இக்காலத்தில் அறிமுகமாகிறது.

சுஜீத்ஜியின் வலிமையாக இருந்த புகலிட வாழ்வும் மற்றும் உறவுகள் சார்ந்த பிரிவு, அவலம் போன்றன அவரது படைப்புகளில் முக்கியமான இடத்தை எடுத்துக்கொள்கின்றன. இரண்டு பாடல்களும் மூன்று குறும்படங்களும் இந்த மூன்றாவது கட்டத்தில் உருவாகின்றன. பாவம், @ஊழியம், மாசிலன் என மூன்று குறும்படங்களும், பெரியார் முரசு கொட்டு வானை முட்டு எனும் பாடலும், எல்லா நாளும் எனும் காதல் பிரிவு பற்றிய பாடலும் என ஐந்து படைப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகின்றன. துவக்க முதலே பாடல்கள் என்பன ஒளிப்பதிவுடன் சம்பந்தப்பட்டது என்பதால் ஒளிப்பதிவில் தொடர்ந்து அவர் காட்சிப் படிமங்களை எவ்வாறு அசலாக உருவாக்குவது என்பதனைப் பயின்று வந்திருக்கிறார். குறும்பட வடிவம் என்பது இதனால் அவருக்கு இயல்பாகவே கூடிவருவதாக ஆகிறது.

சுஜீத்ஜி குறும்படம் எடுக்கத் துவங்கிய காலத்தில் ஐரோப்பாவில் பிரான்சை மையமாகக் கொண்டும், வடஅமெரிக்காவில் கனடாவை மையமாகக் கொண்டும் ஈழக்குறும்படம் என்பது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டிருந்தது. புகலிட நாடுகளில் இளைஞர்களுக்கிடையிலான வன்முறை, அரசியல் முரண்பாடுகள். இயக்கப் பிரச்சினைகள் என்பன குறும்படங்களின் பேசுபொருளகளாகவும் இருந்தன.

சுஜீத்ஜியின் பாவம் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பான ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டிருந்தது. நடந்துவிட்டப் பேரழிவைப் பயன்படுத்தி புகலிட மக்களின் உணர்ச்சிகளைச் சுரண்டிக் காசுபார்க்கும் ஒரு சுயநலக்கும்பல் குறித்த பிரச்சினையை சுஜீத்ஜி அப்படத்தில் பேசியிருந்தார். அப்படம் அவருக்குக் கடுமையான அரசியல் நெருக்கடியையும் தந்தது. அடுத்ததாக புகலிடத் தமிழ் கிறித்தவ அமைப்புகளில் மலிந்திருக்கும் ஊழலையும், சுயநலப் பேராசைகளையும் அம்பலப்படுத்துவதாக அவருடைய @ஊழியம் படம் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே ஒருவகையில் புகலிட நாடுகளில் அன்று நிலவிவந்த இரு வகையான ஊழல்களை அம்பலப்படுத்திய படங்களாக இருந்தன எனலாம். ஓன்று அரசியல் ஊழல் பற்றியதாக இருக்க, இரண்டாவது படம் ஆன்மீகத்தின் பெயரில் வெளிப்படும் ஊழல் பற்றியதாக இருந்தது.

இப்படங்களில் கதைக் கரு எனும் அளவில் தனது கோபத்தை உக்கிரமாக வெளிப்படுத்தியிருந்த சுஜீத்ஜி, குறும்படம் ஒரு காட்சிரூப வடிவம் எனும் அளவில கவனம் குவித்திருக்கவில்லை என்றே சொல்லலாம். காட்சி அமைப்புக்களாலும், மனித உடல்மொழியாலும் அல்லாமல் பெரும்பாலும் பேச்சால் வழிநடத்தப்பட்ட கதைகூரல்களாகவே இந்த இரு படங்களும் இருந்தன எனச் சொல்ல வேண்டும்.

இந்த இரண்டு படங்களில் ஒப்பீட்டளவில் @ஊழியம் மிகுந்த மேதைமையுடனான ஒளியமைப்பும் காமராக் கோணங்களும் கொண்ட படமாக இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும். மிக நீண்ட உரையாடல் காட்சியை ஊடறுப்பதாகச் சில வெட்டுக்களும் அப்படத்தில் இருந்தன. உரையாடலை வெட்டி பார்வையாளனை காட்சிக்குத் திருப்பும் உத்தியாக அந்த வெட்டுக்கள் இருந்தன.

Z2

இன்னும் மூன்று படைப்புக்களைக் குறித்து நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரியார் எனும் ராப் பாடல் ஒன்று, எல்லா நாளும் எனும் காதல் பிரிவுப் பாடல் பிறிதொன்று, அறுதியாக அவர் உருவாக்கிய மாசிலன் எனும் குறும்படம். இதில் பெரியார் இந்தியச் சிந்தனையாளர் ஈ.வெ.ரா பெரியார் அவர்களது சிந்தனைகளின் வெடிப்புறு தன்மையை தனது வெடிப்புறு ராப் வடிவத்தில் சுஜீத்ஜி பதிவு செய்த பாடலாக இருந்தது. தகுதியான காரணங்களுக்காக தமிழகத்தின் திராவிடர் கழகத்தின் அங்கிகாரம் பெற்றது.

எல்லா நாளும் மிகுந்த காட்சியுணர்வும் இசையுணர்வும் படத்தொகுப்பும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாடல். அவரது ராப் வகையிலிருந்து மாறுபட்ட மிக நெகிழ்வான ஒரு காதல் பிரிவுப் பாடலாக அது இருந்தது. இந்த இரு பாடல்களும் தொழில்நுட்ப நேர்த்தியிலும் உள்ளடக்கத்திலும் சுஜீத்ஜியின் கலைநேர்த்தியைச் சொல்வதாக உருவாகி இருக்கிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.

மாசிலன் இன்றைய புகலிட நாடுகளில் தமிழர்கள் என்று அல்லாது எல்லாச் சமூகங்களிலும் இருந்து வருகிற ஒரு துயரமான பிரச்சினையைத் தனது கருவாக எடுத்துக் கொள்கிறது. தாயும் தகப்பனும் எதுவோ ஒரு காரணத்தினால் பிரிந்து விடுகிறார்கள். அவர்களிடம் பரஸ்பரம் வெறுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கிறது. குழந்தை இருவருக்கும் இடையில் தவிக்கிறது. வழக்கு மன்றத்தில் குழந்தை தொடர்பாக வழக்குகள் நடக்கிறது. குழந்தை யாரோ ஒரு பெற்றோரை இழந்து விடுகிறது. புள்ளிவிவரங்களின்படி விவகாரத்துப் பெற்ற பெற்றோரின் குழந்தைகள் அநேகமாகத் தகப்பனை இழந்துவிடுகிறது. இந்தக் குழந்தை மாசற்றது என்கிறார் சுஜீத்ஜி. நாம் அனைவருமே ஒப்புக்கொள்ன வேண்டிய உண்மை.

குழந்தைக்குத் தகப்பனும் வேண்டும் என முடிவு செய்கிற ஓரு தாய் தமக்கிடையிலான  முரண்பாட்டை ஒதுக்கி வைத்து, குழந்தை விரும்புகிறபோது தந்தையிடம் போகலாம் என முடிவெடுக்கிறாள். தேர்ந்த காட்சியமைப்புகளுடன், பொருத்தமான நடிகர்களுடன், இடைவெட்டும் தற்செயல் சம்பவங்களுடன், அற்புதமான ஒரு காட்சியனுபவத்தை மாசிலன் படத்தில் நமக்குத் தந்துவிடுகிறார் சுஜீத்ஜி. ஒளிப்படம் என்பது கச்சிதமான படத்தொகுப்பினால் ஆகிவருவது என்பதை சுஜீத்ஜி உணர்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கான சாட்சியமாக அவரது மாசிலன் குறும்படம் இருக்கிறது.

பெரியார், எல்லா நாளும், மாசிலன் எனும் மூன்று படைப்புகளின் வழி இன்று நமக்குத் தெரியவரும் சுஜீத்ஜி, ஒரு ராப் பாடகனாக, ஒரு குறும்பட இயக்குனராகத் தனது படைப்பாளுமையில் முதிர்ச்சியையும் தொழில்நுட்ப மேதைமையையும் நமக்கு ஒருங்கே காட்டி நிற்கிறார்.

 

source : yamunarajendran.com

Comments are closed.

 

 
 
previous next
X